சென்னையில் கரோனா பாதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் மாயம்

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 72 வயது முதியவர் மாயமாகிவிட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.
ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டவர் எங்கே போனார்?
ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டவர் எங்கே போனார்?


சென்னை: கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 72 வயது முதியவர் மாயமாகிவிட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.

மாயமான நபர் ஆதிகேசவன் (72) என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு ஜூன் 10-ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராடசி ஊழியர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அவருடன் ஆம்புலன்ஸில் மேலும் 5 பேரும் இருந்துள்ளனர். ஆதிகேசவனிடம் செல்லிடப்பேசியும் இல்லை.

தந்தை ஆதிகேசவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக துப்புரவு ஆய்வாளரும் உறுதி செய்துள்ளார்.  மேலும், அவர் உள்பட அனைத்து நோயாளிகளையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் எக்ஸ்-ரே பிரிவில் இறக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இது பற்றி, அந்த ஆய்வாளர் கூறுகையில் கரோனா பரிசோதனைக் கூடத்தில் இருந்து நோயாளிகள் எந்தெந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்ற பட்டியல் எங்களுக்கு வரும். ஆனால் மருத்துவமனையில் தரப்பில் இருந்து வராது. ஆதிகேசவனின் மகன் என்னைத் தொடர்பு கொண்ட போது, அவருடன் அனுமதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியை தொடர்பு கொண்டு, கேட்டேன். அவரும் தன்னுடன் வயதான ஒரு நபரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். எனவே, மகனிடம் அதை உறுதி செய்தேன்.

ஏதோ ஒரு சந்தேகம் ஏற்பட்டு, தனது தந்தையின் புகைப்படத்தை, மகன், சக நோயாளியின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைத்த போது, புகைப்படத்தில் இருப்பவர் தங்களுடன் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் ஆதிகேசவன் என்று நோயாளி யாரும் அனுமதிக்கப்பட்வில்லை என்றும் கூறிவிட்டனர்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வந்தாமணி கூறுகையில், வயதான நபர் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் வரவில்லை. அவர் உள்ளே வந்திருந்தால், அதற்கு சில ஆதாரங்கள் இருந்திருக்கும். மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகள் குறித்து மூன்று விதமாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அவரது பெயர் இங்கு பதிவாகவில்லை. அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாயமாகியிருக்கலாம் அல்லது மருத்துவமனைக்குள் வரும் போது மாயமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அவரது மகன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com