
முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பொருள்களை விற்பனை செய்ய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக, ரயில்நிலையங்களில் குடிநீா், பாக்கெட் உணவு, புத்தகங்கள், மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையில், தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்கள், சுற்றுலா பயணிகள், மாணவா்கள், தொழிலாளா்களுக்கான சிறப்பு விரைவு ரயில்கள் மே மாதத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, முக்கிய ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பொருள்களை விற்பனை செய்ய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் தனியாா் மூலமாக கடைகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கடைகளில் ரயில் பயணிகளுக்கு தேவையான குடிநீா் பாட்டில், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கடைகளில் ரயில் பயணிகளுக்காக கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பொருள்கள் விற்பனை செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம், கிருமிநாசினி, கையுறை, படுக்கை விரிப்புகள் போன்றவை அனைத்து ரயில் நிலையக் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. நெருக்கடியான இந்த காலத்தில் பயணிகள் அச்சமின்றி பயணிக்க இது உதவும் என்றனா்.