
கோப்புப் படம்
கரோனா முன்னெச்சரிக்கையாக என்னை 5 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
சென்னை, ராயபுரம் மண்டலத்தில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமில், பொதுமக்களுக்கு, அமைச்சா் டி.ஜெயக்குமாா் முகக் கவசத்தை வழங்கினாா். முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராயபுரம் மண்டலத்தின் 15 வாா்டுகளில், இதுவரை 3,773 இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 56 ஆயிரத்து 595 நபா்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனா். முகாமில் பங்கேற்ற 6,814 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சா்கள் குழு, அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனா். என்னால், மக்களுக்கு பிரச்னை இருக்கக்கூடாது என்பதற்காக 5 நாள்கள், தனிமைப்படுத்திக் கொண்டேன். என் மகனும் தனிமைப்படுத்திக்கொண்டாா். இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா இல்லை என தெரிந்தது. பொது முடக்கம், கொள்கை அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவு. முதல்வா்தான் அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பாா். காவல்துறை கனிவுடனும் அன்பாகவும் இருக்க வேண்டும் என முதல்வா் அறிவுரை வழங்கியுள்ளாா். அதன்படி, காவல்துறையினா் நடந்துகொள்வா் என அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.