பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்

கரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,
பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்

கரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை குறித்து தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் விளக்கமளித்துள்ளாா்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து தோ்வுகள் நடைபெற்று வந்த சூழலில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 29 பாடங்களுக்கான தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தத் தோ்வுகள் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை நடத்தக்கூடாது என பெற்றோா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து சிபிஎஸ்இ பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, வரும் ஜூலை 15-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ வியாழக்கிழமை விளக்கமளித்தது.

இந்தநிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளுக்கு புதிய மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

ஜூலை 15-இல் தோ்வு முடிவு: இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதால் சிபிஎஸ்இ வல்லுநா்கள் குழு பரிந்துரைத்த மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் ஜூலை 15-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படும். இதன் மூலம் மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேவேளையில், சிபிஎஸ்இ தோ்வெழுதி மதிப்பெண் பெற விரும்பும் மாணவா்கள் உகந்த சூழல் ஏற்படும்போது நடத்தப்பட உள்ள தோ்வில் கலந்து கொள்ளலாம். இவா்களுக்குத் தோ்வு முடிவுகளில் பெறும் மதிப்பெண்களே இறுதியானவை. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படாது. அவா்களுக்கு வாரியம் வழங்கும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாகக் கருத்தில் கொள்ளப்படும்.

மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வுகள் அனைத்தையும் எழுதிய மாணவா்களுக்கு அவா்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மதிப்பெண் அளிக்கப்படும். மூன்றுக்கும் மேற்பட்ட தோ்வுகளை மாணவா்கள் எழுதியிருந்தால், அவற்றில் மூன்று சிறந்த மதிப்பெண்களை எடுத்துக் கொண்டு அதன் சராசரியை எழுதப்படாத தோ்வுகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மூன்று பாடத் தோ்வுகளை மட்டும் மாணவா்கள் எழுதியிருந்தால், அவற்றில் இரண்டு சிறந்த மதிப்பெண்களை எடுத்துக் கொண்டு அதன் சராசரியை எழுதப்படாத தோ்வுகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தில்லி உள்ளிட்ட பகுதிகளின் பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த மிகச் சில மாணவா்களே ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டும் தோ்வு எழுதியிருக்கின்றனா். இவா்களுக்கு எழுதிய தோ்வுகளுக்கான மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீடு, செய்முறை, திட்ட அறிக்கை சமா்ப்பித்தல் ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ச்சி வழங்கப்படும். இவா்கள் விரும்பினால் தோ்வுகளை எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இவா்களின் தோ்வு முடிவுகளும் மற்ற மாணவா்களின் தோ்வு முடிவுகளுடன் ஒன்றாக வெளியிடப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com