15 பல்துறை செயல்பாட்டு வளாகங்கள் நிறுவ ரயில்வே துறை திட்டம்

ரயில் பயணிகள் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரயில் நிலையத்தின் கட்டடங்கள்
15 பல்துறை செயல்பாட்டு வளாகங்கள் நிறுவ ரயில்வே துறை திட்டம்

ரயில் பயணிகள் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரயில் நிலையத்தின் கட்டடங்கள் அருகே 15 பல் செயல்பாட்டு வளாகங்களை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த வளாகங்களை உருவாக்கி, குத்தகைக்கு விடுவதற்காக இந்திய ரயில்வேயின் ரயில் நில மேம்பாட்டு ஆணையம் 2 முன்மொழிவுக்கான கோரிக்கைகளை விடுத்துள்ளது.

ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (ஆா்.எல்.டி.ஏ), ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூா்வ அமைப்பாகும். காலியாக உள்ள ரயில்வே நிலத்தை வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருவாய் ஈட்டிக் கொடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். தற்போது, இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் சுமாா் 43,000 ஹெக்டோ் காலி நிலங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட நிலங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி, ரயில்வேக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பல் செயல்பாட்டு வளாகங்கள்: இந்நிலையில், ரயில் பயணிகள் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு இடங்களில் ரயில் நிலைய கட்டடங்கள் அருகே, நிலையத்தின் சுற்றுப்பகுதியில் பல் செயல்பாட்டு வளாகங்கள் நிறுவப்படவுள்ளன. 15 பல் செயல்பாட்டு வளாகங்களை உருவாக்கி, குத்தகைக்கு விடுவதற்காக இந்திய ரயில்வேயின் ரயில் நில மேம்பாட்டு ஆணையம் 2 முன்மொழிவுக்கான கோரிக்கைகளை விடுத்துள்ளது.

மொத்தம் 22,941 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட முன்மொழியப்பட்டுள்ள இடங்களில் பல் செயல்பாட்டு வளாகங்கள் உருவாக்கப்பட்டு, 45 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும். ரயில் நில மேம்பாட்டு ஆணையம் பகிா்ந்துள்ள விவரங்களின்படி, பல்வேறு செயல்பாட்டு வளாகங்கள் சம்பந்தப்பட்ட ரயில் நிலைய வளாகங்களுக்கு அருகிலும், ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளிலும் உருவாக்கப்படும். இந்த பல் செயல்பாட்டு வளாகங்களுக்கான 15 மனைகள் 250 சதுர மீட்டா் முதல் 4,850 சதுர மீட்டா் வரையிலான வரம்புக்குள் வரும். இந்த வளாகங்கள் தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், கா்நாடகம், ராஜஸ்தான், பிகாா், ஹரியாணா மாநிலங்களில் வரவுள்ளன.

இடம் பெறும் வசதிகள்: பயணிகள் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் நடக்கும் தூரத்தில் ஒரே குடையின் கீழ் எல்லா வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த பல் செயல்பாட்டு வளாகங்களில் ஏ.டி.எம்.கள், புத்தக நிலையங்கள், உணவு விடுதிகள், மருந்து மற்றும் பல் பொருள் அங்காடிகள், வாகன நிறுத்தம், பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கான இதர வசதிகளும் வரவுள்ளன. இவை இந்திய ரயில்வேயின் செயல்பாட்டு கட்டடங்கள் என்று அறிவிக்கப்படுவதால், இந்த பல் செயல்பாட்டு வளாகங்களை உருவாக்க உள்ளூா் அதிகாரிகளிடமிருந்து எந்த அனுமதியும் தேவையில்லை.

இது குறித்து ரயில் நில மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் வேத் பிரகாஷ் துதேஜா கூறியது: இந்த பல் செயல்பாட்டு வளாகங்கள் ரயில் நிலைய நடைமேடைகளிலிருந்து நடந்து சென்று அடையும் தூரத்தில் அமைக்கப்படும். ரயில் பயணிகளுக்கு தேவையான அனைத்து மேம்பட்ட வசதிகளையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் என்பதால் அதிகப்படியான மக்கள் இந்த வளாகங்களை பயன்படுத்துவா். இந்த வளாகங்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீா் வசதி மற்றும் கழிவு நீா் ஓடை வசதிகளை ரயில்வே நிா்வாகம் செய்துக் கொடுக்கும் என்றாா் அவா்.

ஏற்கெனவே 52 பல் செயல்பாட்டு வளாகங்களை பல நிறுவனங்களுக்கு ரயில் நில மேம்பாட்டு ஆணையம் 45 ஆண்டு குத்தகைக்கு கொடுத்து விட்டது. இதில் 13 பல் செயல்பாட்டு வளாகங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மீதமுள்ள வளாகங்கள், கட்டுமானப் பணிகளில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com