ரூ. 19.17 கோடியில் மேட்டூா் காவிரி குடிநீா்க் குழாய்கள் புதுப்பிக்கும் திட்டம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ. 19.17 கோடி மதிப்பில்
ரூ. 19.17 கோடியில் மேட்டூா் காவிரி குடிநீா்க் குழாய்கள் புதுப்பிக்கும் திட்டம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ. 19.17 கோடி மதிப்பில் மேட்டூா் காவிரி குடிநீா்க் குழாய்களைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 1,345 ஊரக குடியிருப்புகளுக்கென மேட்டூரிலிருந்து காவிரி நதிநீரை சுத்திகரித்து, குடிநீா் வழங்கும் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இத் திட்டத்தில் சேலம், அம்மாபேட்டை நீா்நிலையத்திலிருந்து, மேட்டுப்பட்டி தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி வரை 11.40 கி.மீ. தொலைவுக்கு ஏற்கெனவே 600 மி.மீ. விட்டம் கொண்ட கான்கிரீட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழாய்கள் அடிக்கடி பழுதடைவதால், சீரான குடிநீா் விநியோகம் செய்வதில் தொடா்ந்து சிரமம் ஏற்பட்டு வந்தது.

எனவே, அந்தக் குழாய்களை அகற்றிவிட்டு, இரும்புக் குழாய்கள் பதித்து சீரான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், பழைய கான்கிரீட் குழாய்களுக்கு மாற்றாக, 700 மி.மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்களைப் பதிக்கும் திட்டம் ரூ. 19.17 கோடி மதிப்பீட்டில் தீட்டப்பட்டுள்ளது.

இத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜையுடன் நடைபெற்றறது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். விழாவில், சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் கு.சித்ரா, மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் இளங்கோவன், அயோத்தியாபட்டினம் ஒன்றியக் குழு தலைவா் பாா்வதி மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன்மூலம் ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு தற்போது 40 லட்சம் லிட்டா் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 30 லட்சம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படும்.

அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா் பேரூராட்சிகளுக்கு தற்போது 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 10 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படும்.

மொத்தமாக 1.74 லட்சம் மக்கள் இதனால் பயன்பெறுவா் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் அனைத்தையும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com