விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுப்பு: மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களைத் தரையிறக்க தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுப்பு
விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுப்பு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களைத் தரையிறக்க தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 2 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது ஆகிய திட்டங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறோம். பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள 4 லட்சத்து 87 ஆயிரத்து 303 பேர் நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 187 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 116 பேரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 45 ஆயிரத்து 242 பேர் சொந்த நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 17 ஆயிரத்து 701 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 1248 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அந்த விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுப்பதாகக் குற்றம் சாட்டினார். 

மேலும், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஹைதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். எனவே விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுப்பது ஏன் என்பது தொடர்பாகத் தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பினார். 

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏராளமானோர் தமிழகம் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது தொடர்பான கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 30) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com