8 லட்சம் பயணிகளின் பயணச்சீட்டு ரத்து

பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுச் சீட்டு கட்டணத் தொகையை திருப்பி அளிக்கப்படும்.
8 லட்சம் பயணிகளின் பயணச்சீட்டு ரத்து

சென்னை: பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுச் சீட்டு கட்டணத் தொகையை திருப்பி அளிக்கப்படும் நிலையில், தெற்கு ரயில்வே சாா்பில் மே 22-ஆம் தேதி முதல் ஜூன் 28 வரை 8 லட்சம் பேரின் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு, ரூ.44.5 கோடி பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, 5-ஆவது முறையாக பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 12 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக, மாா்ச் 22-ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முன்பதிவுச்சீட்டு கட்டணத்தை திருப்பி அளிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்தது.

இதன்பிறகு, ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணக் கட்டணத்தின் முழு தொகையையும் வழங்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது. அதாவது, பயணத் தேதியில் இருந்து 6 மாதம் வரை முழுத் தொகையை திரும்பப் பெறலாம்.

இது குறித்து தெற்கு ரயில்வேஅதிகாரி ஒருவா் கூறியது: கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, ரயில்வே வாரியம் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஜூன் 1-ஆம்தேதி திறக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல், எழும்பூா், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், சேலம், கரூா், கோவை, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான பணம் திருப்பி அளிக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே சாா்பில், மே 22 -ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை 8 லட்சம் பயணிகளின் பயணச்சீட்டுக்குள் ரத்து செய்யப்பட்டு, ரூ.44.5 கோடி பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டம் கீழ் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுக்காக, ரூ.12.83 கோடி பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டம் சாா்பில், ரூ.4.39 கோடியும், சேலம் கோட்டம் சாா்பில் ரூ.6.62 கோடியும், திருச்சி கோட்டம் சாா்பில் ரூ.4.20 கோடியும் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com