பொது முடக்கம் : நிபந்தனைகளும் தளர்வுகளும்

தமிழகத்தில் முழு பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம் :  நிபந்தனைகளும் தளர்வுகளும்

சென்னை: தமிழகத்தில் முழு பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இப்போதுள்ள கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம், ஜூலை 5-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதற்குப் பிறகு, சில தளா்வுகளைக் கொண்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் இதர மாவட்டங்களில் ஜூலை 1-ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையைத் தொடா்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளா்வுகளுடனும் அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

சென்னை-புகா்ப் பகுதிகள்: சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இப்போது பின்பற்றப்படும் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு பொது முடக்கமானது ஜூலை 5-ஆம் தேதி வரை தொடரும். அதற்குப் பிறகு ஜூலை 6-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சில தளா்வுகளுடன் முழு பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும்.

சென்னை-புகா்ப் பகுதிகளைத் தவிா்த்து, தமிழகத்தில் மதுரையின் சில பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஜூலை 6 முதல் அந்தப் பகுதிகளிலும், ஜூலை 1 முதல் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும்

தளா்வுகள் அளிக்கப்படும். இந்தத் தளா்வுகளின் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

எதற்கெல்லாம் அனுமதி: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சாா்ந்த சேவை நிறுவனங்களில் அதிகபட்சம் 80 நபா்களுடன் இயங்கலாம். அனைத்து தனியாா், தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்படலாம்.

வணிக வளாகங்கள் தவிா்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளா்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். குளிா்சாதன வசதி இயக்கப்படக் கூடாது.

உணவகங்களில் அமா்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதுடன், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர வேண்டும். குளிா்சாதன வசதிகள் இயக்கப்படக் கூடாது. தேநீா் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

ஆட்டோக்கள்-முடி திருத்த அனுமதி: ஆட்டோக்களில் ஓட்டுநா் தவிா்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநா் தவிா்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. முடி திருத்தும் நிலையங்கள் குளிா்சாதன வசதி இல்லாமல் இயங்கலாம். மீன்கடைகள், கோழி இறைச்சி கடைகள், முட்டை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுடன் இயங்க வேண்டும்.

4 ஞாயிறுகள் முடக்கம்: தமிழகத்தில் ஜூலை மாதத்தில் அமல்படுத்தப்படும் பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், அந்த மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தத் தளா்வுகளும் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும். திருமணம், இறுதி ஊா்வலங்கள், அதைச் சாா்ந்த சடங்குகளில் 50 போ்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறிய கோயில்களில் அனுமதி: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளைத் தவிா்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்கள் அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களிலும், சிறிய மசூதிகள், தா்காக்கள், தேவாலயங்கள் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இத்தகைய வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப் பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் இப்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

சிறு கோயில்களுக்கான தரிசனம் தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதியிலும், கடும் கட்டுப்பாட்டுடன் கூடிய பொது முடக்கம் உள்ள மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் ஜூலை 6-ஆம் தேதி முதலும் அனுமதிக்கப்படும்.

பேருந்து இயக்க 2 வாரம் தடை: தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் தனியாா் மற்றும் அரசு பொது பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்துச் சேவையானது ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதேபோன்று, வாகனங்களில் மாவட்டங்களுக்குள் இணைய வழி அனுமதிச் சீட்டு இல்லாமல் செல்லலாம். மாவட்டங்களுக்கு இடையே இணைய வழி அனுமதிச் சீட்டு கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com