தமிழகத்தில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மருத்துவ நிபுணர் குழு பேட்டி

தமிழகத்தில் முழு பொது முடக்கத்துக்கு பரிந்துரை செய்யவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக் குழுவினர்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக் குழுவினர்


சென்னை: தமிழகத்தில் முழு பொது முடக்கத்துக்கு பரிந்துரை செய்யவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், சென்னையைப் போன்றே பிற மாவட்டங்களிலும் அதிக அளவு பரிசோதனைகளைச் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10- வது தளத்தில் கூட்டம் நடைபெற்றது. ஆறாவது முறையாக நடந்த இந்தக் கூட்டமானது காலை 10.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணியளவில் 
நிறைவடைந்தது. 

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் மருத்துவர் பிரதீபா கவுர்: மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக கருத்துகளைத் தெரிவித்தோம். ஜெனீவாவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் காணொலி வழியாக கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்தார். 

மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசைக் கூறினோம். அதனை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று தொடர்பாக தினமும் சென்னையில் 10 ஆயிரமும், தமிழகத்தின் இதர பகுதிகளில் 32 ஆயிரம் அளவுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரங்களாக நோய்த் தொற்றின் தாக்கம் இதர மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது. மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் பரிசோதனைகளை எடுக்க வேண்டும்.     காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, சுவை மற்றும் மணத்தை அறிய முடியாவிட்டாலோ உடனடியாக நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவுகளால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலைப்பட வேண்டாம். இதன் மூலம் நோய் பரவலையும் இறப்பையும் தடுக்க முடியும். அதுதான் முக்கியம்.

பொது முடக்கம்: பொது முடக்கம் என்பது நமக்கு சில நேரங்களில் தேவைப்படுகிறது. ஆனால், அதுமட்டுமே தீர்வு  கிடையாது. பொது முடக்கம் காரணமாக சென்னையில் பரிசோதனைகள் செய்யவும், நோய் பரவலைத் தடுக்கவும் முடிகிறது. அனைத்துப் பகுதிகளிலும் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த இடத்தில் தேவையோ அங்கு மட்டுமே செய்யலாம். லேசான அறிகுறிகள் இருக்கும் போது அவர்கள் மூலமாக நோய்த் தொற்றுகள் பிறருக்கு ஏற்படும். எனவே, லேசான அறிகுறிகள் தென்படும் போதே பரிசோதனைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுப் போக்குவரத்து: பொதுப் போக்குவரத்தால் நோய் பரவுவது அதிகரிக்கிறது என கண்டறிந்துள்ளோம். எனவே, அதனை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளோம். சளி மாதிரிகளை பரிசோதிக்கும் வசதிகள்  இருக்கும் இடத்தில் விரைவு பரிசோதனை கருவிகள் தேவையில்லை. தமிழகத்தில் பொது முடக்கத்துக்கு பரிந்துரைக்கவில்லை என்றார்.

தொற்று நோய் மருத்துவர் குகானந்தம்: நோய்த் தொற்று அதிகரிப்பால் மக்களிடையே பீதி அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும்.   மற்ற மாநிலங்களில் இருந்து வந்ததால் இதர மாவட்டங்களில் சுமார் 3,500 பேர் வரை தொற்று அதிகரித்துள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும். 

காய்ச்சல், மூச்சுத் திணறல், சளி, இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோய்கள் உள்ளோர் நோய்த் தொற்று உள்ளாகி பலியாகி வருகின்றனர். எனவே, அவர்கள் உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும். இறப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதே நமக்கு முக்கியம். தமிழகத்தில் நோய்த் தொற்றால் அதிகரிப்போர் இருந்தாலும் இறப்பு விகிதம் குறைந்தே இருக்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநில்த்திலும் இல்லாத வகையில் 11 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

கோடாரியும், கொசுவும்...
பொது முடக்கம் போன்ற நடைமுறைகள் கோடாரியால் கொசுவைக் கொல்வதற்குச் சமமான நடைமுறை என்று தொற்று நோய் சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார். இதுகுறித்து, தலைமைச் செயலக வளாகத்தில் அவர் அளித்த பேட்டி: 

பொது முடக்கம் என்பது நோய்த் தொற்று பரவைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறைதான். இது கோடாரியால் கொசுவைக் கொல்வதற்கு சமமானது. இதுவே தீர்வல்ல. நோய்த் தொற்று தொடர்பாக சிறிய அறிகுறிகள் இருந்தால் கூட தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பொது முடக்கம் என்பது தீர்வு அல்ல. ஆனாலும் அதனால் பயன் கிடைத்துள்ளது. 6  மாதங்களாக பொது முடக்கத்தை மட்டுமே தொடர்ச்சியாகச் செய்வதில் பயனில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com