சாத்தான்குளம் சம்பவ விசாரணை சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது. 
சாத்தான்குளம் சம்பவ விசாரணை சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு


சென்னை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்லிடப்பேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை கடந்த 19- ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறியதாக போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பலத்தக் காயங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 20- ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பென்னிக்ஸ் 21- ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் பென்னிக்ஸ், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதேபோல ஜெயராஜ், 22- ஆம் தேதி  உயிரிழந்தார். இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார், கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக இரு வழக்குகளைப் பதிவு செய்தனர். 

அதிகாரிகள் பணியிடை நீக்கம்: தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தன. மேலும் வணிகர் சங்கங்கள் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டங்கள் நடத்தின. இதன் காரணமாக துறைரீதியாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு, பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்தது.

இந்த வழக்கு நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு விசாரணை சிபிஐ- க்கு மாற்றப்பட வேண்டும், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதியப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டம், தலைவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை: இதையடுத்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றுவதற்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் இறந்த வழக்குகளை சிபிஐ- க்கு மாற்றி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் திங்கள்கிழமை இரவு அரசாணை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com