கரோனா நோய்த் தொற்று பரிசோதனையில் லேப் டெக்னீசியன்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் லேப் டெக்னீசியன்களைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரிசோதனையில் லேப் டெக்னீசியன்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் லேப் டெக்னீசியன்களைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் போது தொண்டை மற்றும் மூக்கிலிருந்து சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இந்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சையளிக்கும் (ஈஎன்டி) மருத்துவா்கள், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவா்கள் ஆகியோரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளது.

மேலும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிப்பது மட்டுமே லேப் டெக்னீசியன்களின் பணியாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் லேப் டெக்னீசியன்கள் மூலமாகவே கரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. மேலும், இந்தப் பணியில் ஈடுபட லேப் டெக்னீசியன்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். எனவே, மாதிரிகளை சேகரிக்கும் பணிகளில் லேப் டெக்னீசியன்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசுத் தரப்பில், கரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளைச் சேகரிக்க லேப் டெக்னீசியன்கள் தகுதியானவா்கள். ஆனால் அவா்கள் தங்களது கடமைகளைச் செய்ய தவறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com