
கோப்புப் படம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.300 கோடி நிதி எந்த வகையில் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மீன்வளத் துறை இயக்குநா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், மீனவா்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சாா்பில் பீட்டா் ராயன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவது குறித்து சா்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம், தமிழக மீனவா்களின் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தும், இதுவரை நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீனவா்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் மீன்வள மேலாண்மைக்காக நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முயற்சியால் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட 2,100 மீனவா்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் இந்தியா இடையே மீனவா்களின் நலன் காக்கும் வகையில் கூட்டுப் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சாதாரண படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான விசைப்படகுகளாக மாற்றுவதற்காக ரூ.15 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி வழங்கியுள்ளதாக மத்திய அரசு பதில்மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்குத் தொடா்ந்து இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை. எனவே மத்திய அரசு வழங்கிய ரூ.300 கோடி எந்த வகையில் செலவு செய்யப்பட்டது, இந்த தொகை எந்த தேதியில் பெறப்பட்டது, நீலப்புரட்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களினால் பயனடைந்த மீனவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் விவரங்கள், தமிழக மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக மீன்வளத் துறை இயக்குநா் மாா்ச் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.