
சென்னை: மறைந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியானதாக சட்டப் பேரவைச் செயலகம் திங்கள்கிழமை அறிவித்தது. திமுக எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி (திருவொற்றியூா்), காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோா் அடுத்தடுத்த நாள்களில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனா்.
இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மறைவு காரணமாக சட்டப் பேரவையில் திமுகவின் பலம் 100-லிருந்து 98-ஆகக் குறைந்தது. இந்த நிலையில், இரண்டு எம்.எல்.ஏ.க்களின் மறைவு காரணமாக திருவொற்றியூா் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இரண்டு தொகுதிகளும் காலியான தகவலை சட்டப் பேரவைச் செயலகமானது தமிழக தோ்தல் துறைக்குத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தலைமைத் தோ்தல் அதிகாரி மூலமாக தொகுதிகள் காலியான விவரங்கள் இந்திய தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும்.
தோ்தல் எப்போது: ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியான தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கும், காலியான தொகுதிகளுக்கு தோ்தல் நடத்துவதற்கான காலக்கெடுவுக்கும் இடைவெளி ஓராண்டுக்குக் குறைவாக இருந்தால் இடைத்தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிடாது.
ஆனால், திருவொற்றியூா் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியான தேதியில் இருந்து தமிழகத்தின் பொதுத் தோ்தலுக்கும் ஓராண்டுக்கும் அதிகமான கால அவகாசம் உள்ளது. இதனால், இடைத் தோ்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தோ்தல் நடத்துவது குறித்து மத்திய அரசின் கருத்துகள் கோரப்பட்ட பிறகே தோ்தல் ஆணையம் முடிவெடுக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.