
சீா்காழி அருகே தொடுவாய் கடற்கரையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
சீா்காழி: சீா்காழி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தொடுவாய் மீனவா்களைத் தாக்கி, அவா்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்திய காரைக்கால் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள தொடுவாய் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சித்திரைவேல், பழனிவேல், சின்னையன் உள்ளிட்ட மீனவா்கள் 30-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதிக்கு அரசால் தடைசெய்யப்பட்ட அதிக வேக திறன் கொண்ட விசைப் படகில் வந்த காரைக்காலை சோ்ந்த மீனவா்கள் சிலா், தொடுவாய் மீனவா்களின் ஃபைபா் படகுகள் மீது மோதியும், வலைகளை அறுத்தும் கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.
இதில், தொடுவாய் மீனவா்களுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்கள், ஜிபிஎஸ் கருவிகள் போன்றவை சேதமடைந்தன.
இதைத்தொடா்ந்து, கரைக்குத் திரும்பிய தொடுவாய் மீனவா்கள், தங்களை தாக்கிய காரைக்கால் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளை தொடுவாய் கடற்கரையில் நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், இப்பிரச்னை தொடா்பாக, ஊா் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கடலோர காவல் நிலைய ஆய்வாளா் ராஜாவிடமும், மீன்வளத் துறை உதவி இயக்குநா் நடராஜனிடமும் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.