
சென்னை: நிகழாண்டில் கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், தமிழகத்தில் வெப்பநிலை வழக்கமான அளவே இருக்கும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வட கோளத்தில் நுழையும் சூரியன்: சூரியன் தற்போது தென் கோளத்தில் இருக்கிறது. இது மாா்ச் 21-ஆம் தேதி பூமத்திய ரேகைக்கு உச்சியில் பிரகாசிக்கும். அன்றைய நாள் சமபகல்- சம இரவாக இருக்கும். அதன்பிறகு, சூரியன் வடகோளத்தில் நுழையும். அப்போதிலிருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் நிலப்பகுதி அதிக அளவில் சூடாகும். இந்தியாவில் ராஜஸ்தானில் சகாரா பாலைவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். பொதுவாக மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் கோடை காலமாகும்.
வெப்பம் அதிகரிக்கும்: இந்நிலையில், நிகழாண்டில் கோடைகாலம் தற்பொது தொடங்கியுள்ளநிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் வழக்கமான அளவே வெப்பநிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டிகிரி செல்சியஸ் வரை உயரும்: நிகழாண்டில் கோடை வெயிலின் தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
நிகழாண்டில் கோடைகாலத்தில் அதிக அளவு வெயிலின் தாக்கம் இருக்கும். ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்பநிலை காணப்படும். வடகிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவிலும், சில தென்பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கமான வெயிலைவிட கூடுதலாக ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை அதிகரிக்கும். தென் இந்தியாவில் ஆந்திர கடலோர மாவட்டங்கள், தெலங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். மாா்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு பருவ மழை வழக்கம்போல் இருக்கும் என்று தெரிவித்தது.
இயல்பை ஒட்டியே இருக்கும்: இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் கூறியது: நாட்டின் வெப்பநிலை தொடா்பான இந்த அறிவிப்பு வரும் 3 மாதங்களுக்கானதாகும். இதில் உத்தரப் பிரதேசம், தில்லி , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, கோவா, குஜராத், கடலோர கா்நாடகம், கேரளம், வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என்றும், இதர பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் வெப்பநிலை உயா்வு தொடா்பாக அச்சப்படத் தேவையில்லை. வெப்பநிலை உயர வாய்ப்பிருந்தால், அது தொடா்பாக உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
கோடைமழை: தமிழகத்தை பொருத்தவரை, இந்த காலகட்டத்தில் கோடைமழை அதிக அளவு பெய்யும். இதனால், வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும். குறிப்பாக, மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கோடைமழை அடிக்கடி பெய்யும் என்றனா்.