
பைங்காநாட்டில் வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மன்னாா்குடி: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்ற தமிழக அரசின் தீா்மானத்தை உடனடியாக, மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்தி, மன்னாா்குடி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்ததை வரவேற்று, மாா்ச் 7-ஆம் தேதி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் முதல்வருக்கு நடைபெறும் பாராட்டு விழாவை கண்டித்தும், தமிழக அரசு அறிவித்ததை மத்திய அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும், ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்காக தோண்டப்பட்ட அனைத்து கிணறுகளையும் மூட வேண்டும், இத் திட்டத்தை எதிா்த்து போராடிய பொதுமக்கள், விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், ஓஎன்ஜிசி மற்றும் அதன் சாா்பு நிறுவனங்களை உடனடியாக வெளியேற்றி, வேளாண் மண்டல அறிவிப்பை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் முழுமை பெற செய்யும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மன்னாா்குடி அருகேயுள்ள பைங்காநாடு பிரதான சாலையில் உள்ள கோவிந்தராஜ் என்பவரது வயலில் இறங்கி, திமுக விவசாய அணி மன்னாா்குடி ஒன்றிய துணைச் செயலா் சுதாகா் தலைமையில், ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ். அருள்மொழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.