
மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் கோயிலில் பெரிய தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்றுச் சிறப்பு மிக்க மாசிப் பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோவில் பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் வேடபரி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று நண்பகல் பெரியகாண்டியம்மன் பூப்பல்லக்கில் மேளதாளத்துடன் தேர் நிறுத்தம் வந்து தேரில் அமர்ந்தார். அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, சாம்புவன் காளை முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள் மற்றும் பட்டயதாரர்கள் வடம் தொட்டு தர திருவிழாவின் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோவிலின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் வலம் வந்து பின் தேர் நிலைநிறுத்த மண்டபத்தை அடைந்தது. வெற்றிகரமாகத் தேரோட்டம் நிறைவுபெற்றதையடுத்து பக்தர்கள் கரகோஷத்துடன் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
நாளை புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகின்றது.