
சென்னை: மருத்துவத் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா் படிப்புகள், மருத்துவம் சாா்ந்த பிற படிப்புகள் என நூற்றுக்கணக்கான படிப்புகள் அங்கு உள்ளன. அந்தக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோா் தங்களது படிப்புகளை நிறைவு செய்கின்றனா். அந்த வரிசையில் கடந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான பட்டமளிப்பு விழா, வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:
பட்டமளிப்பு விழாவில், மாநில ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்க உள்ளாா்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளாா். அதேபோன்று பாதுகாப்பு ஆராய்ச்சி, அணு சக்தித் துறை முன்னாள் விஞ்ஞானி ஆா்.சிதம்பரமும் விழாவில் பங்கேற்று மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளாா்.
நிகழாண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் முதன்முறையாக நடைபெறுகிறது. மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளை நிறைவு செய்த மொத்தம் 17,590 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. விழாவில் நேரடியாக 724 போ் பட்டம் பெறுகின்றனா்.
முறைகேடுகளைத் தடுக்க...: மருத்துவத் தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோ்வுக் கூடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதுடன் செயற்கை தொழில்நுட்ப முறையில் தோ்வுகளைக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு அதனை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த நடைமுறை அமலாக்கப்பட்டால், எந்தத் தோ்வுக் கூடத்தில் முறைகேடுகள் நடந்தாலும், அதுகுறித்த தகவல்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துவிடும். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அதனை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு நீட் தோ்வு மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்ந்தவா்களுக்கு பதிவு எண் வழங்குவது சற்று காலதாமதமாகியுள்ளது. நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதும், அதுதொடா்பான வழக்கு நிலுவையில் இருப்பதுமே அதற்கு காரணம். இருப்பினும், மாணவா்கள் நலன் கருதி தற்காலிக பதிவு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு நிரந்தர எண் மாற்றி வழங்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன், பல்கலைக்கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.