பண மோசடி வழக்கு: திமுக உறுப்பினா் செந்தில்பாலாஜி ஆஜர்

பண மோசடி வழக்கில் திமுக உறுப்பினா் செந்தில்பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

பண மோசடி வழக்கில் திமுக உறுப்பினா் செந்தில்பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான செந்தில்பாலாஜி, கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 81 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு ரூ.1 கோடியே 62 லட்சத்தை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மோசடி செய்துவிட்டதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். 

இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த முறை இவ்வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து இவ்வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி, பிரபு, அன்னராஜ் ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சகாயராஜன் ஆஜராகாவில்லை என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டு பதிவை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரபு பிறப்பித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com