
கோப்புப் படம்
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்றால் தமிழக எம்.எல்.ஏ.க்களைக் கடத்துவோம் என காவல்துறைக்கு வந்த கடிதம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு முஸ்லிம் இயக்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் பல்வேறு முஸ்லிம் இயக்கத்தினா் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினா். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இப் போராட்டம் 19-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கிடையே சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு திங்கள்கிழமை ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அல்-ஹக் என்ற புதிய அமைப்பின் பெயரில் வந்த அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இனியும் எங்களால் பொருத்துக் கொள்ள முடியாது. காவல்துறையையும், அரசியல்வாதிகளையும் நம்பிப் பயன் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த முயற்சிக்கிறாா்கள். எங்களது இயக்கத்தில் மொத்தம் 250 போ் உள்ளோம். எங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை.
எங்களுக்கு எதிரான இந்தச் சட்டங்களை அமல்படுத்த முயன்றால், நாங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்துவோம். நாங்கள் சாதாரணமானவா்கள் கிடையாது. சுமாா் 30 ஆண்டுகளாக பல்வேறு பயிற்சிகளை எடுத்துள்ளோம். ஒருபோதும் எங்களது இலக்கில் இருந்து பின்வாங்க மாட்டோம். எங்களில் ஒருவரை காவல்துறை கண்டறிந்து கைது செய்துவிட்டால் கூட, மீதமுள்ள 249 பேரும் காவல்துறையில் சரணடைந்துவிடுவோம் என சவால்விடுக்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘அல்-ஹக்’ என்ற பெயரில் அனுப்பப்பட்டிருந்த இந்த மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனா். இந்தக் கடித்ததை அனுப்பிய நபரை கண்டறிந்து கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.