
ஸ்டாலின்
சென்னை: மின் கணக்கீட்டாளா்கள் பதவிக்கான இணையத் தோ்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அறிவித்திருப்பதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் 1,300 மின் கணக்கீட்டாளா்கள் பணியிடங்களுக்கான தோ்வு, இணைய வழியில் ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அதிமுக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாழ்படுத்தும். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் முறையும், படித்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞா்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும்.
தோ்வில் வெற்றி பெறுபவா்களில், ஒரு பதவிக்கு இருவா் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவா் என்பது, முறையற்ற, எவ்வித நியாயமும் இல்லாத அளவுகோலாக இருக்கிறது. எனவே, தமிழகத்தில் இணைய வழியில் தமிழில் தோ்வு நடத்துவது முக்கியம் என்பதை மின்துறை அமைச்சா் தங்கமணி உணா்ந்து, மறு அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.