சங்ககிரி அருகே தனியார் சொகுசுப்பேருந்திலிருந்து திருடப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள வைரநகைகள் மீட்பு: 5 பேர் காரில் தப்பி ஓட்டம் 

சேலம் மாவட்டம், சங்ககிரியைஅடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி வளாகத்தில் ஓய்வுக்காக நிறுத்தியிருந்த தனியார் சொகுசுப்பேருந்தில் வைக்கப்பட்டிருந்த
சங்ககிரி அருகே தனியார் சொகுசுப்பேருந்திலிருந்து திருடப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள வைரநகைகள் மீட்பு: 5 பேர் காரில் தப்பி ஓட்டம் 

சேலம் மாவட்டம், சங்ககிரியைஅடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி வளாகத்தில் ஓய்வுக்காக நிறுத்தியிருந்த தனியார் சொகுசுப்பேருந்தில் வைக்கப்பட்டிருந்த வைர நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்று விட்டனர். 

இது குறித்து விசாரித்து வந்த தனிப்படை போலீஸார் மார்ச் 2ம் தேதி தருமபுரி காளிபாவடி என்ற இடத்தில் திருடி சென்றவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்களை தப்பிச் சென்று விட்டனர். அவர்களிடமிருந்து வைரநகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சேலம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். 

தெலுங்கானா, உப்பல், விஐயபுரி காலனி பகுதியைச் சேந்த ரவீந்தர் மகன் கௌதம் (31) என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.  அவர் அக்கடையில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் கலர் கற்கள் பதித்த 592 கிராம் எடையுள்ள நெக்லஸ் 7,  287 கிராம் எடையுள்ள 14 ஜோடி காதணிகள் , 11 கிராம் எடையுள்ள ஒரு மோதிரம் ஆகியவற்றை  எடுத்துக்கொண்டு அவருடன் கோவை கிளையில் பணிபுரிந்து வரும் சுனில்காந்த, பிரதீப் ஆகியோருடன்  அதே கடையின் மற்றொரு கிளையான திருப்பூர் கிளைக்கு கொண்டு செல்வதற்காக  ஹைதராபாத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில்  ஏறியுள்ளனர். 

கடந்த பிப்ரவரி 9ம் தேதி தனியார் சொகுசு பேருந்து சங்ககிரி அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் பேருந்தின் ஓட்டுநர் ஓய்வு எடுப்பதற்கும், இயற்கை உபாதைகளுக்காக பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது கௌதம் இயற்கை உபாதைகளுக்காக அப்பகுதியில் இருந்த சுகாதார வளாகத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பேருந்தில் அவர் வைத்து விட்டு சென்ற வைர நகைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அவர் வைத்து விட்டு சென்ற இடத்தில் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து  அவர் சங்ககிரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியிலும், பேருந்திற்குள் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.  

இதனையடுத்து சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.தீபாகாணிகேர்மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையிலும், சங்ககிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.எம்.தங்கவேல் தலைமையிலும், சங்ககிரி காவல் ஆய்வாளர் என்.முத்துசாமி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டன. இத்தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பெங்களூரு, சித்தூர், ஐதராபாத், மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர், உஸ்மானாபாத் ஆகிய இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து மத்தியபிரதேசம் தார் மாவட்டம், முல்தானிகேர்வா பகுதியைச் சேர்ந்த ஹசாம் மகன் முஸ்தபா, அமதுஷாஸில் மகன் அக்தர், பாபு மகன் முனீர், நூர் மகன் அகமதுகான், நன்னூர் ரத்தோர் மகன் அஜய்ரத்தோர் ஆகியோர் நகை திருடியது தெரியவந்துள்ளது.  

இதனையடுத்து அவர்களிடம் நகைகள் விலைக்கு தேவை என்று தனிப்படை போலீஸார் தகவல் தெரிவித்து அவர்களை தருமபுரி அருகே உள்ள காளிபாவடி பகுதிக்கு வர கூறியுள்ளனர். அதில் அவர்கள் கொண்டு வந்திருந்த நகைகள் சங்ககிரியில் திருடப்பட்ட நகைகள் என்று தெரியவந்துள்ளதையடுத்து தனிப்படை போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர் எதிர்பாரதவிதமாக நகையை எடுத்து வந்தவர்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து நகைகளை அப்பகுதிகளிலேயே போட்டுவிட்டு ஐந்து பேரும் பதிவு எண் இல்லாத வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர்.  தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட வைர நகைகளை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.தீபாகாணிகேர் பார்வையிட்டு தனிப்படை போலீஸாரை பாராட்டினர்.  

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com