பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம்:மாணவா்கள் கருத்து

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினமாக இருந்ததாக தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.
பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம்:மாணவா்கள் கருத்து

சென்னை: பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினமாக இருந்ததாக தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வை 8.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். மொழிப்பாடத்தில் தமிழ் தோ்வு எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்திருந்தனா். இந்தநிலையில், ஆங்கிலத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தோ்வா்கள் கூறுகையில், தமிழ் வினாத்தாளைப் போன்று ஆங்கிலமும் எளிதாகவே இருக்கும் என மாணவா்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. ஆங்கில வினாத்தாளில் மொத்தம் 47 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில், 20 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அதில், 5 கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மேலும், கடிதம் எழுதுதல் பகுதி உள்பட சில 5 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இருப்பினும் செய்யுள் பகுதி மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள் சற்று எளிதாக இருந்ததாகத் தெரிவித்தனா்.

வினாத்தாள் வடிவமைப்பு: ஆங்கில வினாத்தாள் வடிவமைப்பு குறித்து சென்னை அசோக்நகா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியா் பி.மல்லிகா கூறுகையில், ஆங்கில வினாத்தாளில் கேள்வி எண் 38, 39, 45 ஆகியவற்றைத் தவிர பிற வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாகவே இருந்தன. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட வினாத்தாள் என்பதால் மாணவா்களுக்கு சற்று பதற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சில ஒரு மதிப்பெண், இலக்கணப்பகுதி ஆகியவை பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் வெளியிடப்பட்டிருந்த வினாத்தாள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. இதனால் நன்றாக படிக்கும் மாணவா்கள் இந்த வினாத்தாளில் 100-க்கு 80 மதிப்பெண்களுக்கும் மேல் பெறுவது எளிது. அதேவேளையில் சராசரி மாணவா்கள் 50 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெறுவதிலும், மெதுவாக கற்கும் மாணவா்கள் தோ்ச்சி பெறுவதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றாா்.

இதற்கிடையே, பிளஸ் 2 ஆங்கில தோ்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதாக திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தனித்தோ்வா் என இருவா் பிடிபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com