குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏப்ரலில் நடைபயணம்: இரா. முத்தரசன் பேட்டி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் தெரிவித்தது:

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை யாரும் தூண்டவில்லை; தன்னெழுச்சியாக நடைபெறுகிறது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை. எனவே, விடுதலைப் போராட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் போல, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்ச் இறுதிக்குள் சமூக நல்லிணக்க மாநாடு நடத்தவுள்ளோம்.  

மேலும், விடுதலைப் போராட்டக் காலத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக பாதையாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக ஏப். 13 முதல் 28-ம் தேதி வரை திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரக் கேட்டுக் கொள்கிறோம்.

நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடுவதற்கான சூழல் உள்ளது. கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்றடையும் வகையில் உடனடியாகத் தூர் வாரும் பணியை அரசுத் தொடங்க வேண்டும். கடந்த காலம் போல அணை திறக்கப்படும் நேரத்தில் தூர் வாரும் பணியைத் தொடங்கி முறைகேடு நிகழ்ந்ததைப் போல இந்த ஆண்டு இருக்கக்கூடாது என்றார் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com