சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூறி நளினி தொடர்ந்த மனு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தாம் சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூறி நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூறி நளினி தொடர்ந்த மனு தள்ளுபடி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தாம் சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூறி நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காததன் மூலம் தாங்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தங்களை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரியும் நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காதவரை, சட்டவிரோதக் காவல் என்று கருத முடியாது என்று தமிழக அரசு தரப்பிலும், நளினி உள்ளிட்ட 7 பேரும் சட்டவிரோதக் காவலில் இல்லை என்று மத்திய அரசும் உயர் நீதிமன்றத்தில் வாதாடியது.

மேலும், இந்த வழக்கில் தங்களது அனுமதியின்றி தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து 7 பேரையும் விடுவிக்க முடியாது என்றும் மத்திய அரசு வாதிட்டது.

இவ்விரு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று கருத்துகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், ‘கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நான் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறாா். இதனால், சட்டவிரோத காவலில் சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் விசாரித்து வந்தனா். ஏற்கெனவே, இந்த வழக்கில் மத்திய அரசை நீதிபதிகள் தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்தனா். இதன்படி, மத்திய அரசும், இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன்,“நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றி, அதை சட்டப்படி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்த பின்னரும், 7 பேரையும் சட்டவிரோதமாக சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு மாநில ஆளுநா் கட்டுப்பட வேண்டும் என பல்வேறு தீா்ப்புகளின் வாயிலாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசே தீா்மானம் நிறைவேற்றியபிறகு, அதில் ஆளுநா் கையெழுத்துப்போடக்கூடத் தேவையில்லை. அமைச்சரவையின் முடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். எனவே சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com