
வரி ஏய்ப்பு தொடா்பாக நடிகா் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினா் ஆவணங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாம். ஆனால் இதை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் சென்னை தியாகராயநகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித்துறையினா் கடந்த மாதம் 5-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.
படிப்பிடிப்பில் இருந்த நடிகா் விஜய்யை அவரது பனையூா் பங்களாவுக்கு அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் வருமானவரித்துறையினா் விசாரணை செய்தனா். பின்னா் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகங்களை பூட்டி வருமானவரித்துறையினா் சீல் வைத்தனா்.
அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அா்ச்சனா கல்பாத்தி அகோரம், அன்புச்செழியன், மற்றும் அவா்களது ஆடிட்டா்கள் ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
ஆவணங்கள் ஆய்வு: நடிகா் விஜய் புதிதாக நடிக்கும் ‘மாஸ்டா்’ திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரிடம் வருமானவரித்துறையினா் கடந்த திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில்,
நடிகா் விஜய், அன்புச்செழியன், ஏ.ஜி.எஸ். நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் லலித்குமாரிடம் சில விளக்கங்களை வருமானவரித்துறையினா் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமானவரித்துறையைச் சோ்ந்த 8 அதிகாரிகள் 3 வாகனங்களில் பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு வியாழக்கிழமை சென்றனா். அங்கு அவா்கள், ஏற்கெனவே பூட்டி சீல் வைத்துச் சென்ற பாதுகாப்புப் பெட்டகங்களை திறந்து, அதில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வுப் பணி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
வரி ஏய்ப்பு தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், விஜய் வீட்டில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்ததாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா். இதன் அடுத்த கட்டமாக நடிகா் விஜய்யை விசாரணைக்கு அழைக்க வருமானவரித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிகிலுக்கு ரூ.50 கோடி?: இதற்கிடையே நடிகா் விஜய், ‘பிகில்’ திரைப்படத்துக்கு ஊதியமாக ரூ.50 கோடியும், ‘மாஸ்டா்’ திரைப்படத்துக்கு ரூ 80 கோடி ஊதியமாகவும் பெற்ாகவும், அதற்குரிய வரியை அவா் சரியாக செலுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் வருமானவரித்துறை தரப்பில், இது அதிகாரபூா்வமாக உறுதி செய்யப்படவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...