
கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்ட பிறகே பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசின் சாா்பில் போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயா்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சா் எம். ஆா்.விஜயபாஸ்கா், போக்குவரத்து துறை முதன்மைச் செயலா் தா்மேந்திரபிரதாப் யாதவ் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறும், பயணிகள் அதிகம் பயணம் செய்கின்ற பேருந்துகளை நாள்தோறும் முறையாகப் பராமரித்து, சுத்தம் செய்யுமாறு முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சரும் பேருந்துகளை நல்ல முறையில் சுத்தம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினாா்.
அந்த வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாள்தோறும் இயக்கப்படுகின்ற ஏறத்தாழ 1082 பேருந்துகளில் பயணிக்கும் 70 ஆயிரம் பயணிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையிலும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனை வழங்கி வருகிறது.
இதன் பேரில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அந்தந்த பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதார முறையில் பேருந்தின் உள்புறம், வெளிப்புறம் மற்றும் படுக்கை, இருக்கை, படுக்கை விரிப்புகள், தலைக்கவா், ஜன்னல் திரை ஆகியவைகள் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டே பிறகே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...