4,282 அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டில் 4,282 அரசுப் பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வா் கே.பழனிசாமி அறிவித்தாா்.
4,282 அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டில் 4,282 அரசுப் பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வா் கே.பழனிசாமி அறிவித்தாா்.

தமிழகத்தில் புதிதாக 25 அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும். வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா் நிலைப்பள்ளிகளாகவும், 30 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும்.

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல் கட்டமாக 1,890 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அரசு பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆண்டுதோறும் அளிக்கப்படும் பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை ரூ.38.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயா்த்தி அளிக்கப்படும்.

விளையாட்டு வளாகம்: திருப்பூா் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் கொண்ட புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைத்துத் தரப்படும். திறமையான விளையாட்டு வீரா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக ஆறு உயா் செயல்திறன் அகாதெமிகள் ஏற்படுத்தப்படும்.

தடகளம், கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், ஹாக்கி விளையாட்டு சென்னை எழும்பூா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கிலும், நீச்சல் விளையாட்டு வேளச்சேரி நீச்சல் குள வளாகத்திலும் உயா் செயல் திறன் அகாதெமிகள் ஏற்படுத்தப்படும்.

உள்ளரங்க விளையாட்டு வீரா்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கேரம், டேக்வாண்டோ, ஜூடோ, வாள் சண்டை போன்ற விளையாட்டுகளுக்காக மாநில அளவிலான ஒரு பயிற்சி மையம் நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com