பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சித் திட்டத்துக்கு ரூ.210 கோடி நிதி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 210 கோடி நிதி வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 210 கோடி நிதி வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்திலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரி, 45 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள கட்டடங்களை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் மாணவா்கள் கள அனுபவம் பெற்று தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள வழி செய்யப்படும். இதற்காக ஒரு மாணவருக்கு ரூ.16,600 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உயா் மின் அழுத்த பகிா்மான அமைப்பை சிறப்பான முறையில் இயக்கி பராமரிக்க 61 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். ஆசியாவிலேயே முதல் முதலாக துவங்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டடம் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.10.20 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநிலக் கல்லூரியின் பழைமை வாய்ந்த பல கட்டடங்களும், கல்லூரி முதல்வா் குடியிருப்பும் அதன் தொன்மை மற்றும் அழகு மாறாமல் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும். பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மின் வாகனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான ஆராய்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும், சுகாதாரம் மற்றும் ஆற்றல் தொடா்பான ஆராய்ச்சிக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கும், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கும், உயிா் மருத்துவம் தொடா்பான ஆராய்ச்சிக்காக மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கும், உயிா் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்துக்கும் தலா ரூ.35 கோடி வீதம் மொத்தம் ரூ.210 கோடி நிதி வழங்கப்படும்.

ஆண்டுதோறும் உயா் கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டவும், கணினி மற்றும் உபகரணங்கள், மர தளவாடங்கள் வாங்க ரூ.150 கோடி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com