ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்திவைப்பு

கரோனா அச்சம் காரணமாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்

ஈரோடு: கரோனா அச்சம் காரணமாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது.

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் தனித்தனி கம்பம் நடப்பட்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் நிறைவடையாததால், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் நடக்கும் விழாக்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி அந்த கோவிலில் பூச்சாட்டு, கம்பம் நடுதல், குண்டம் உள்ளிட்ட விழாக்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டு, மற்ற கோயில்களான பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்களில் திருவிழா வழக்கம்போல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கான ஏலம் விடப்பட்டது. மேலும் கோயில் பகுதியில் பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டது. திருவிழா தொடங்குவதற்கான பூச்சாட்டுதல் விழா  செவ்வாய் இரவு நடைபெறுவதாக இருந்தது.  இதையொட்டி கோயில் முழுவதும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் இருந்தே பக்தர்கள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.

இந்நிலையில் கரோனா  அச்சுறுத்தல் காரணமாக கோயில் திருவிழாக்களை நடத்துவது குறித்து என்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஈரோட்டில் செவ்வாய் மாலை ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே கோயிலில் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் கொண்டு வந்த மலர்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதனால் பூச்சாட்டுதலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.

இரவு 9 மணி அளவில் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. அதில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் இரவு நடக்க இருந்த பூச்சாட்டுதல் நிறுத்தப்பட்டது. ஆனால் பக்தர்கள் வழக்கம்போல் பூக்களை கொண்டு வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், இந்த ஆண்டு 2 கம்பங்கள் மட்டுமே நடப்பட்டு திருவிழா நடப்பதாக இருந்தது. ஆனால் திருவிழாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் காரை வாய்க்கால் கோயிலின் திருப்பணிகள் நிறைவடைந்த பிறகு, அந்த கோயிலின் கும்பாபிஷேகத்தோடு சேர்த்து 3 கம்பங்களுடன் திருவிழாவை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். கோயிலின் திருப்பணிகள் 2 மாதங்களில் நிறைவடைந்துவிடும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com