பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகளுக்குத் தடை விதிப்பு

பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகள் நடத்த இன்று காலை முதல் இம்மாதம் 31-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகளுக்குத் தடை விதிப்பு

பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகள் நடத்த இன்று காலை முதல் இம்மாதம் 31-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதுறைக்குச் செல்லும் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பவானியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு முன்பாக தனியாக நுழைவாயில் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி கலந்த தண்ணீரால் கைகளைக் கழுவிய பின்னரே கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்டமாகச் செல்லாமல், தனித்தனியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று முதல் 31-ம் தேதி வரையில் பரிகார வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதுறைக்குச் செல்லும் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டு, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதுறையில் புனித நீராடவும், பரிகார வழிபாட்டுக்கும் வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் கூடுதுறை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com