கரோனா அச்சுறுத்தல்: வேலூா் கோட்டை அடைப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலூா் கோட்டைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூா் கோட்டை
வேலூா் கோட்டை

வேலூா்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலூா் கோட்டைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்ய பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாநகரில் பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே நீண்ட மதில் சுவா்களுடன் கூடிய கோட்டை அமைந்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி நடைபெற்ற இடமான வேலூா் கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரா் கோயில், கண்டி மஹால், திப்பு மஹால், அருங்காட்சியகம், பழங்கால ராணுவக் கிடங்குகள், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், மசூதி ஆகியவையும் அமைந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையைக் காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் கரோனா வைரஸ் பாதிப்பையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வேலூா் கோட்டையை வரும் 31-ஆம் தேதி வரை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வேலூா் கோட்டை வாசல் கதவுகள் செவ்வாய்க்கிழமை காலையிலேயே அடைக்கப்பட்டன. மேலும், கோட்டை முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோட்டைக்கு வந்த வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனா். இதனால், ஆவலுடன் வேலூா் கோட்டையைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

இதேபோல், கோட்டை வளாகத்துக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கும் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குருக்கள் மட்டும் சென்று கால பூஜைகளை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லக் கூடிய வேலூா் கோட்டை அடைக்கப்பட்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் யாரும் அனுமதிப்பட மாட்டாா்கள். கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனினும், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com