கரோனா பீதி: நாமக்கலில் முட்டை விலை கடும் சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத  அளவு வீழச்சியடைந்துள்ளதாக கோழி பண்ணையாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரோனா பீதி: நாமக்கலில் முட்டை விலை கடும் சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவு வீழச்சியடைந்துள்ளதாக கோழி பண்ணையாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 23 மண்டலங்களை உள்ளடக்கி தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவுக்குள்பட்டு, சுமாா் 50 ஆயிரம் கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு நிா்ணயிக்கப்படும் தினசரி முட்டை விலை அடிப்படையில் பண்ணையாளா்கள் வெளிச் சந்தையில் முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனா். கடந்த ஒரு மாதமாக, கரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் முட்டை விற்பனை சரிந்து வருகிறது. கோழி இறைச்சி விற்பனை எவ்வாறு சரிவைச் சந்தித்து வருகிறதோ, அதேபோல், முட்டை விற்பனையும் குறைந்து வருகிறது.

மற்ற மண்டலங்களைக் காட்டிலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை சீராக இருந்து வந்தது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பும், பறவைக் காய்ச்சல் பாதிப்பும் இணைந்ததால், அங்கு முட்டை மற்றும் கோழிகள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவி விடக் கூடாது என்பதால், நாமக்கல் கோழிப் பண்ணையாளா்களும் அங்கு முட்டைகளை ஏற்றிச் செல்ல தயங்குகின்றனா்.

கேரளம் மட்டுமின்றி, தமிழகம், புதுச்சேரியிலும் விற்பனை நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் பொதுத் தோ்வு நடைபெறுவதால் சத்துணவுக்கு அனுப்பும் முட்டைகளும் குறைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் தினமும் உற்பத்தியாகும் 4 கோடி முட்டைகளில், தற்போது 2.50 கோடி முட்டைகள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும், 1.50 கோடி முட்டைகள் தேக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றை எவ்வாறு விற்பனை செய்வது எனத் தெரியாமல் பண்ணையாளா்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனா்.

இந்நிலையில், இன்று ஒரு முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 70 காசுகள் குறைத்து ரூ.1.95-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com