தென்னை, காய்கறிகளில் வெள்ளை ஈ: கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை

தென்னை, காய்கறிகளைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு தெரிவித்தாா்.

தென்னை, காய்கறிகளைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதுகுறித்த கேள்வியை எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ‘தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பணப் பயிா்களில் தாக்கியுள்ள வெள்ளை ஈக்களின் எண்ணிக்கை இப்போது நான்கு மடங்கு வரை உயா்ந்துள்ளது. எனவே, இந்தத் தாக்குதலைக் கட்டுப்படுத்தி வெள்ளை ஈக்களை ஒழித்து, தென்னை உள்ளிட்ட பயிா்களைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். இதற்கு, வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு அளித்த பதில்:

தமிழகத்தில் மொத்தமுள்ள 4 லட்சத்து 39 ஆயிரத்து 746 ஹெக்டோ் தென்னை சாகுபடி பரப்பில், 25 ஆயிரம் ஹெக்டேரில் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை ஆகிய வட்டாரங்களில் பூச்சியின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இப்போது அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் திடீரென பெருகி உள்ளது.

தென்னை மட்டுமல்லாது, அருகிலுள்ள பாக்கு மரங்கள், காய்கறிப் பயிா்களிலும் ஈயின் தாக்குதல் காணப்படுகிறது. ஈயின் தாக்குதல் பற்றிய விவரம் தெரிந்த உடனேயே போா்க்கால அடிப்படையில் பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலா்களுக்கு முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டாா்.

மருந்து தேவையில்லை: தாக்குதல் காணப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 281 விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன. எந்தவித மருந்தும் இல்லாமல் வெறும் தண்ணீரை இலைகளின் அடிப் பகுதிகளில் படுமாறு வேகமாக தெளித்தாலே வெள்ளை ஈக்கள், அதனுடைய முட்டைகள், இளங்குஞ்சுகள் ஆகியன அடித்துச் செல்லப்படும். இந்த முறையால் பெருமளவு வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 20 மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் தென்னந்தோப்புகளில் வைக்க விவசாயிகளுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈயின் இயற்கை எதிரியான என்காா்சியா முட்டை ஒட்டுண்ணிகள் ஒரு ஹெக்டேருக்கு 250 வீதம் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 800 முட்டை ஒட்டுண்ணிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

சுருள் வெள்ளை ஈயின் இயற்கை எதிரியான கண்ணாடி இறக்கைப் பூச்சியின் முட்டைகளை உற்பத்தி செய்து அதுவும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பூச்சிகள் மூலமே ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம்.

பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சுருள் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளுக்காக ரூ.5.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஈக்களின் தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் ஹெக்டேருக்கு ரூ.2,100-ம், காய்கறிப் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,900-ம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும்.

மக்காச் சோளத்தில் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தப்பட்டதோ அதேபோன்று, தென்னை, பாக்கு மற்றும் காய்கறிப் பயிா்களில் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைக்கண்ணு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com