கரோனா தடுப்புப் பணியில் 3.50 லட்சம் உள்ளாட்சிப் பணியாளர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 3.50 லட்சம் உள்ளாட்சித் துறை பணியாளர்களும்
கரோனா தடுப்புப் பணியில் 3.50 லட்சம் உள்ளாட்சிப் பணியாளர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 3.50 லட்சம் உள்ளாட்சித் துறை பணியாளர்களும், சென்னையில் மட்டும் 3,000 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


 தமிழகத்தின் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா முன்னெச்சரிக் கை நடவடிக்கை குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாநகராட்சி, காவல், ரயில்வே உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை, ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது: சோப்பு உபயோகித்து முறையாகக் கை கழுவினால் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து 80 சதவீதம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, முறையாகக் கை கழுவும் முறை குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதுகுறித்து ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமாக கை கழுவும் வழிமுறைகள்குறித்த வில்லைகள் உள்ளாட்சித் துறை சார்பில் ஒட்டப்பட்டு வருவதுடன், அதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  வங்கிகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சுகாதாரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


3.50 லட்சம் ஊழியர்கள்: உள்ளாட்சித் துறையைப் பொருத்தவரை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் சுமார் 3.50 லட்சம் பேர் ஏற்கெனவே டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையைப் பொருத்தவரை வெளிநாடு மற்றும்  வெளிமாநிலங்களில் இருந்து அதிக மக்கள் வந்து செல்லும் நகரம் என்பதால், சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் குழுக்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தெருவாரியாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார்.


 இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர்  ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன்,  நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com