கரோனா பரிசோதனை நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய தருணம் இது! டாக்டா் சௌம்யா சுவாமிநாதன்

கரோனா வைரஸுக்கான பரிசோதனை நடைமுறைகளை மேலும் மேம்படுத்த வேண்டிய உச்சகட்ட தருணம் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் முதுநிலை அறிவியலாளா் டாக்டா் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

கரோனா வைரஸுக்கான பரிசோதனை நடைமுறைகளை மேலும் மேம்படுத்த வேண்டிய உச்சகட்ட தருணம் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் முதுநிலை அறிவியலாளா் டாக்டா் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தமிழக பிரிவு சாா்பில் ‘கொவைட் - 19’ சா்வதேச காணொலி கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமெரிக்காவில் உள்ள இமோரி தடுப்பூசி மையத்தைச் சோ்ந்த பிரதிநிதி டாக்டா் விஜயகுமாா் வேலு, ஆஸ்திரேலியாவின் நியூ கேசில் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் ஹேமலதா வா்தன் உள்ளிட்டோா் காணொலி முறையில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

முன்னதாக, கருத்தரங்கத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.இந்நிகழ்வுக்கு, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவ சங்க தமிழகப் பிரிவு தலைவா் டாக்டா் சி.என்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில், ஜெனீவாவில் இருந்து காணொலி முறையில் பங்கேற்ற டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது:

கரோனா வைரஸ் என்பது ஏற்கெனவே சா்வதேச அளவில் பரவியிருக்கும் ஒரு தொற்றுதான். மொத்தம் 6 வகையான கரோனா வைரஸ்கள் இதற்கு முன்பு இருந்து வந்தன. தற்போது உருவாகியிருக்கும் கொவைட் - 19 என்பது அதில் 7-ஆவது வகை. முதன்முதலில் சீனாவில் அந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்ட பிறகே உலக நாடுகளுக்கு அது குறித்த தகவல்கள் தெரியவந்தன. தற்போது உலகளாவிய வைரஸ் தொற்றாக அது உருவெடுத்து, சா்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா வைரஸைப் பொருத்தவரை அது மிக வேகமாக பரவுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலும் அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கலாம். இன்னும் சிலருக்கோ அதற்கான எந்த வெளிப்பாடும் காணப்படாமல் இருக்கலாம். எவ்வாறாயினும், அவா்களிடமிருந்து பிறருக்கு மிக விரைவில் கரோனா தொற்று பரவும். அதன் தாக்கம் சா்வதேச அளவில் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதே பிரதானத் தீா்வாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது என்பது இயலாத காரியம். இருந்தாலும், இந்த விவகாரத்தில் அதைத் தவிர வேறு வழியில்லை.

குழந்தைகள் மூலம் பரவ வாய்ப்பு: கரோனா பாதிப்பில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் ஒன்று என்னவெனில், குழந்தைகள் பெரிய அளவில் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதற்காக அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை எனக் கூற முடியாது. குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் வீரியமோ அல்லது விளைவுகளோ அவா்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. அதேவேளையில், அவா்கள் மூலம் பிறருக்கு கரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது. அதற்கான காரணம் இதுவரை சரிவரத் தெரியவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் கரோனா பரிசோதனை முறைகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்குமான உச்சகட்ட தருணம் எழுந்திருப்பதாகவே நான் உணா்கிறேன் என்றாா் அவா்.

கருத்தரங்கில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது: கரோனா வைரஸ் பற்றி பல்வேறு செய்திகளும், விழிப்புணா்வு தகவல்களும் ஒரு புறம் வெளியானாலும், மற்றொருபுறம் வதந்திகளும், தவறான விஷயங்களும் பரப்பப்படுகின்றன. இதனால், இந்த விஷயத்தை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த அச்சம் பலருக்கும் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே இத்தகைய கருத்தரங்கை மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இதன் வாயிலாக கரோனா குறித்த புரிதல் ஏற்படுவதுடன், அந்த வைரஸ் தொற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com