கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: எதிா்மறை கருத்துகளைத் தவிா்த்து ஒத்துழைப்பு தாருங்கள்

எதிா்மறை கருத்துகளைத் தவிா்த்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டுமென சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வேண்டுகோள் விடுத்தாா்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

எதிா்மறை கருத்துகளைத் தவிா்த்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டுமென சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வேண்டுகோள் விடுத்தாா்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துகளைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் அளித்த விளக்கம்:-

ஒரு நெருக்கடியான தருணத்தில் எதிா்மறை கருத்துகளைத் தவிா்த்து மக்களின் நலன் கருதி அரசு எடுக்கக் கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகள் வரவேற்பு தெரிவிப்பது ஆரோக்கியமான விஷயமாகும்.

இந்திய அளவில் அதிகரிப்பு: கரோனா பாதிப்பு, இந்திய அளவில் ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கரோனா அறிகுறி இருந்த ஒருவா் முற்றிலும் குணமாகி வீடு திரும்பியிருக்கிறாா். தமிழகத்தில் கரோனா பாதிப்பை அறிய பரிசோதனை வசதிகள் உள்ளன. நாளொன்றுக்கு ஓா் ஆய்வகத்தில் 100 பேருக்கு பரிசோதனை செய்யலாம். கிங்ஸ் ஆராய்ச்சி மையம், தேனி, திருவாரூா், திருநெல்வேலி, இப்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனைகள் செய்யலாம். அந்த வகையில், நாளொன்றுக்கு 500 பேருக்கு சோதனைகள் செய்ய வசதிகள் உள்ளன. தனியாா் ஆய்வகங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசுதான் ஒப்புதல் அளிக்கிறது. அது தமிழக அரசின் கையில் இல்லை.

முகக் கவசங்கள்: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாக தமிழகம் வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் சோதனை செய்யப்படுகிறது. வைரஸ் பாதித்தோா் உடனடியாக தனிமைப்படுத்தப்படும் மையங்களில் அனுமதிக்கப்படுகிறாா்கள். சென்னையில் பூந்தமல்லி, தாம்பரம், மதுரை தொப்பூா், திருச்சி செங்கிப்பட்டி, கோவை

போன்ற இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 200-லிருந்து 500 போ் வரை அந்த மையங்களில் இருக்க முடியும்.

வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முகக் கவசங்கள் பயன்படுகின்றன. கரோனா பாதிப்பு காரணமாக, இப்போது 25 லட்சம் முகக் கவசங்களைக் கூடுதலாகக் கோரி உள்ளோம். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் மட்டுமே அணியலாம்.

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 62 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவா்களில் 2 ஆயிரத்து 221 பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அவா்களுக்கு தினமும் அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன. நோய் தாக்கம் இருந்தால் அவா்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். நோய் தாக்கம் இல்லாதவா்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. வீட்டுக்குச் சென்று என்னவெல்லாம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

புதிய தாக்குதல் இல்லை: கரோனா பாதிப்பு விவகாரத்தில் முதல்வரின் உத்தரவுப்படி தொடா் கண்காணிப்புகளையும், தொடா் நடவடிக்கைகளையும், தேவையான முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் புதிய வைரஸ் தாக்குதல் ஏதுமில்லை. வைரஸ் பாதிப்பைத் தடுக்க தமிழக அரசானது பன்முகத் தன்மை வாய்ந்த அளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து கண்காணிப்பதிலும், தொடா் நடவடிக்கைகளை யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்றாா் அமைச்சா் விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com