கோழி மற்றும் அதன் முட்டைகளை தாராளமாக உண்ணலாம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோழி மற்றும் அதன் முட்டைகளை தாராளமாக உண்ணலாம் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
கோழி மற்றும் அதன் முட்டைகளை தாராளமாக உண்ணலாம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோழி மற்றும் அதன் முட்டைகளை தாராளமாக உண்ணலாம் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அண்மைக் காலமாக கரோனா பீதியால், கறிக்கோழி, முட்டைக் கோழி, முட்டை ஆகியவற்றின் விற்பனை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. ரூ.4.50-க்கு விற்பனையான முட்டை விலை ரூ.1.95-க்கும், ரூ.80-க்கு விற்பனையான கறிக்கோழி ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தவறான தகவல்களை சமூக ஊடகங்களின் வாயிலாகப் பரப்பியதே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்துப் பண்ணைகளிலும் 19 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கரோனா வதந்தியால் இதுவரை முட்டைத் தொழிலில் ரூ.500 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள முட்டைகள் மூலம் தினமும் ரூ.8 கோடிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. கரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. 

இதனிடையே சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், கோழி மூலம் கரோனா வைரஸ் பரவும் என்ற தவறான வதந்தி பரவி வருகிறது. அதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப்பண்ணையாளர்கள் நஷ்டமடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்து பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கோழி மூலம் எந்தவித கரோனாவும் பரவுவதில்லை என சுகாதாரத்துறை ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. எனவே, கோழி மற்றும் அதன் முட்டைகளை தாராளமாக உண்ணலாம். நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com