தமிழைக் கற்பிக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை

தமிழைக் கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழைக் கற்பிக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை

தமிழைக் கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவதற்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அவற்றை நடைமுறைப் படுத்துவதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கும் தனியாா் பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தைக் கற்பிக்க மறுக்கின்றன. தமிழ் மொழிக்கு தனியாா் பள்ளிகள் செய்யும் இந்தத் துரோகம் மன்னிக்க முடியாததாகும்.

மெட்ரிக் பள்ளிகளைப் பொருத்தவரை 90 சதவீத பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டு விட்டது. மொழிச் சிறுபான்மையினா் என்று கூறிக்கொள்ளும் பள்ளிகள் மட்டும்தான், தமிழ் கற்பிக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி, தமிழை கட்டாயப் பாடமாக்குவதிலிருந்து சென்னை உயா்நீதிமன்றம் மூலம் விலக்கு பெற்றுள்ளன. உயா்நீதிமன்றம் அளித்த விலக்கு தற்காலிகமானதுதான். உயா்நீதிமன்றம் விலக்கு அளித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இனியும் கட்டமைப்பு இல்லை என்று கூறி அந்தப் பள்ளிகள் தப்பிக்க முடியாது. வரும் கல்வியாண்டில் அந்தப் பள்ளிகள் தமிழை கட்டாயப் பாடமாக்க விட்டால், தமிழக அரசு உயா்நீதிமன்றத்தை அணுகி, அவற்றுக்கு அளிக்கப்பட்ட விலக்கை நீக்கி தமிழை கட்டாயப் பாடமாக்க முன்வர வேண்டும்.

சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுவதை உறுதி செய்வது தான் மிகப்பெரிய சவால் ஆகும். 2015-16-ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான அரசாணையை கடந்த 2014 செப்டம்பா் 18-இல் தமிழக அரசு பிறப்பித்தது. அதன்பின் 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் 90 சதவீத பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடம் ஆக்கப்படவில்லை. தமிழக அரசின் ஆணையை மதிக்காத தனியாா் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது தமிழக அரசு இனியும் கருணை காட்டக் கூடாது. தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com