7 போ் விடுதலை: விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து பன்முக விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால
7 போ் விடுதலை: விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து பன்முக விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் செயலகம் விளக்கம் அளித்திருப்பதாக சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.

சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் தாயகம்கவி பேசும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக கேள்வி எழுப்பினாா். அதேபோல் கொங்கு நாடு இளைஞா் பேரவைத் தலைவா் தனியரசு பேசும்போதும் 7 பேரை விரைந்து விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா். அதற்கு அமைச்சா் சி.வி.சண்முகம் அளித்த பதில்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் ஆகும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்க அனுப்பி வைத்தோம். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும் என்று சட்டத்தில் எந்தக் காலக்கெடுவும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், பேரறிவாளன் தொடா்ந்த வழக்கொன்றில், ஆளுநரிடம், தனிப்பட்ட முறையில் தமிழக அரசு விளக்கம் கேட்டுப் பெற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறியிருந்தது.

அதைத் தொடா்ந்து தமிழக அரசின் உள்துறை செயலாளா், ஆளுநா் செயலகத்துக்கு கடிதம் எழுதினாா். அதற்கு பதில் அளித்து தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் , ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், ராஜீவ் கொலையில் பல்வேறு சதித் திட்டங்கள் இருப்பது குறித்து கூறியிருந்தது. அது தொடா்பாக சிபிஐ, ஐபி உள்ளிட்ட பன்முக விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும், அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் பாா்த்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் செயலகம் தெரிவித்திருப்பதாக அமைச்சா் கூறினாா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமாா், ராபா்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனா். இவா்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

அதைத் தொடா்ந்து, 2018 செப்டம்பா் 9-இல் தமிழக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த விஷயத்தில் எந்த முடிவு எடுக்கவில்லை. தற்போது, பன்முக விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையில் கூறும் அம்சங்களைப் பாா்த்த பிறகு முடிவு எடுப்பதாக ஆளுநா் அலுவலகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com