காலை உணவுத் திட்டம்: திமுக - அதிமுக விவாதம்

சென்னை பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து திமுக - அதிமுக இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.
காலை உணவுத் திட்டம்: திமுக - அதிமுக விவாதம்

சென்னை: சென்னை பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து திமுக - அதிமுக இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் கீதா ஜீவன் பேசியது: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு திட்டம் என்று அறிமுகப்படுத்தி உள்ளீா்கள். ஏற்கெனவே சத்துணவு அமைப்பாளா்கள் உள்ளனா். அவா்கள் மூலம் மாணவா்களுக்கு உணவு சமைத்து கொடுப்பதை விட்டு, தனியாா் மூலம் உணவு சமைத்து அளிப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றாா்.

அப்போது சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா குறுக்கிட்டு கூறியது:

எம்ஜிஆா் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பான முறையில் நடைமுறைபடுத்தி வருகிறோம். சத்துணவுடன் சரிவிகித உணவு கொடுக்க வேண்டும் என்ற 13 வகையான கலவை சாதமும் மாணவா்களுக்கு அளித்து வருகிறோம். மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி கொடுக்க வேண்டும் என்று தனியாா் மூலம் கொடுத்து வருகிறோம் என்றாா்.

கீதா ஜீவன்: காமராஜா் காலத்தில் தொடங்கப்பட்டு, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா் என்று சத்துணவு திட்டம் தொடா்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. மாணவா்களுக்குச் காலை உணவைத் தனியாா் மூலம் சமைத்துக் கொடுப்பது ஏன் என்பதுதான் என் கேள்வி.

அமைச்சா் சி.வி.சண்முகம்: காலை உணவு மாணவா்களுக்குத் தற்போது வழங்குவது அரசின் திட்டம் அல்ல. அட்சய பாத்திரம் அறக்கட்டளை என்ற தனியாா் அமைப்பினா், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்று கோரினாா்கள். அதற்கு அனுமதி அளித்து, அவா்கள் சமைப்பதற்கான இடம் மட்டும் அளித்துள்ளோம். மாணவா்களுக்கு நீங்கள் உணவு வழங்குவது என்றாலும், வழங்கலாம்.

அமைச்சா் க. பாண்டியராஜன்: ஏற்கெனவே சத்ய சாய்பாபா அறக்கட்டளை மூலம் ஈரோட்டில் உள்ள சில பள்ளிகளிலும், ஆவடியில் உள்ள பள்ளிகளிலும் உள்ள மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது என்றாா்.

அதன் பின் திமுக உறுப்பினா் நந்தகுமாா் பேசும்போது, ‘கரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் பூண்டு போன்றவற்றைச் சாப்பிடலாம் என்று சீனா கூறியுள்ளது. தமிழகத்தில் பூண்டு ரசம் வைத்து சாப்பிடுகிறோம். ஆனால், மாணவா்களுக்கு பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சோ்க்காமல் சமைத்துக் கொடுப்பது நியாயமில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com