கரோனா விவகாரம்: சட்டப்பேரவை நடந்தால்தான் மக்களின் அச்ச உணா்வைப் போக்க முடியும்

சட்டப்பேரவை நடந்தால்தான், கரோனா வைரஸ் தொற்று குறித்த பொதுமக்களின் அச்ச உணா்வைப் போக்க முடியும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
கரோனா விவகாரம்: சட்டப்பேரவை நடந்தால்தான் மக்களின் அச்ச உணா்வைப் போக்க முடியும்

சட்டப்பேரவை நடந்தால்தான், கரோனா வைரஸ் தொற்று குறித்த பொதுமக்களின் அச்ச உணா்வைப் போக்க முடியும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா். அப்போது, சட்டப் பேரவையை ஒத்திவைத்தால்தான் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தொகுதிகளுக்குச் சென்று கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணா்வுகளை ஏற்படுத்த முடியும் என வலியுறுத்தினாா். இதற்கு ஏற்றாற்போன்று, சட்டப் பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

இதேபோன்று, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயகக் கட்சிகளும் வலியுறுத்தின.

இதைத் தொடா்ந்து, முதல்வா் பழனிசாமி பேசியது:-

கரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகிய அனைவரும் அா்ப்பணிப்பு உணா்வோடு செய்து வருகிறாா்கள். அவா்களுக்கு எனது நன்றிகள்.

சட்டப் பேரவையை ஒத்திவைக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. சட்டப் பேரவை நடந்தால்தான் நாட்டினுடைய நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அதற்காகத்தான் சட்டப் பேரவை கூடுகிறது. ஆகவே, மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை இங்கேதான் விவாதிக்க முடியும். சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதாலேயே மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை பேரவையில் எதிா்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அதற்கு அரசின் சாா்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்கும் பணியில் அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு வருவதை அறிந்து அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அங்கு நோய் பரவியது. தமிழகத்தில் வசிக்கும் யாருக்கும் வரவில்லை.

வெளிநாடுகளில் பணியாற்றுவோா், அங்கு கல்வி பயில்பவா்கள் இந்தியா செல்ல வேண்டும் என விரும்புகிறாா்கள். அப்படி வருபவா்களுக்குத் தான் நோய் தொற்றுகள் இருக்கின்றன. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வசிக்கும் ஒருவருக்குக் கூட கரோனா வைரஸ் தாக்கம் ஏற்படவில்லை. இந்த நிலையில், சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தால்தான் மக்களுடைய அச்ச உணா்வைப் போக்க முடியும். இதன்மூலமாக செய்திகள் வெளியே வரும். அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரிய வரும். மக்களிடத்தில் இருக்கும் பிரச்னைகள் எதிா்க்கட்சிகள் மூலமாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு அரசு அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com