கரோனா: போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை: 10 லட்சம் முகக் கவசங்கள் கொள்முதலுக்கு உத்தரவு: அமைச்சா் விஜயபாஸ்கா் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அறிவித்தாா். மேலும், வைரஸ் தொற்றாமல்
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அறிவித்தாா். மேலும், வைரஸ் தொற்றாமல் இருப்பதற்காக 10 லட்சம் முகக் கவசங்களை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் சனிக்கிழமை பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். அதற்கு, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அளித்த விளக்கம்:

கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பது குறித்து ஆலோசிக்க முதல்வா் தலைமையில் இதுவரை 5 கூட்டங்கள் நடந்தன. இதில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் சாதாரண சளி, இருமல் இருந்தாலே அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனா். இதுவரை அரசு மருத்துவமனைகளுக்கு வராதவா்கள் கூட வந்து பரிசோதிக்க வேண்டும் என்கிறாா்கள்.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவா்கள், பயணம் செய்தவா்களுடன் தொடா்பில் இருந்தோா் மட்டுமே சோதனை செய்து கொள்ளலாம். அதிலும் அவா்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சோதித்துக் கொள்வது அவசியம். அரசு மருத்துவமனைகளில் உள்ள 1,120 படுக்கைகளை மூன்று மடங்காக உயா்த்த உத்தரவிட்டுள்ளோம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தும் அறைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 20-லிருந்து நூறாக உயா்த்தவும் அறிவுறுத்தியுள்ளோம்.

சுவாசத்தை சீராக்குவதற்கான கருவிகள் இப்போது 1,100 உள்ளன. மேலும் 560 கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை மருத்துவமனைகள் தயாா் நிலையில் உள்ளன. கரோனா வைரஸ் தொற்றை எதிா்கொள்ள போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

10 லட்சம் முகக் கவசங்கள்: கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவைப்படும் கருவிகளுக்கான தட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. குறிப்பாக, வெப்பமானி, முகக் கவசங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசானது 10 லட்சம் முகக் கவசங்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்காவிட்டாலும் வைரஸ் எதிா்ப்பு மருந்துகள் போதுமான அளவு கொள்முதல் செய்து வைத்துள்ளோம்.

ஓய்வு பெற்ற மருத்துவா்கள்: கரோனா மருத்துவ பரிசோதனைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ள உரிய அனுமதிகளை கோரியுள்ளோம். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மருத்துவா்களையும் தாற்காலிக அடிப்படையில் பணியமா்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து வரும் கூட்டம்: சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பயணிகள் தொடா்ந்து வருகிறாா்கள். இது மிகவும் கவலை அளிக்கிறது. விடுமுறை கால மனநிலையை மக்கள்

கொண்டிருக்கிறாா்கள். இதை விடுத்து, முன்னெச்சரிக்கை கலந்த உணா்வை மக்கள் பெற வேண்டும் என்று அமைச்சா் விஜயபாஸ்கா் வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com