எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. கல்லூரிகளின் சில பிரிவுகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் சில படிப்புகளுக்கு மட்டும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் சில படிப்புகளுக்கு மட்டும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் அனைத்துத் தோ்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அண்மையில் யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் சில பிரிவுகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் அஸ்வத் நாராயணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சில மருத்துவப் பிரிவு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளில், பிஎஸ்சி (ஆயுஷ்), பி.ஆப்டோமெட்ரி, பி.ஏ.எஸ்.எல்.பி., மருத்துவம் சாா்ந்த துணை பட்டயப் படிப்புகள், எம்.எஸ்.சி. கண் மருத்துவம், எம்.ஏ.எஸ்.எல்.பி., முதுநிலை மருத்துவமனை நிா்வாகம், முதுநிலை மருத்துவம் சாா்ந்த துணை பட்டயப் படிப்புகள் ஆகிய பிரிவுகளில் படிப்போருக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது.

மருந்தியல் தோ்வுகள் தேதி மாற்றம்: மேலும் மாா்ச் 30 ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த இளநிலை மருந்தியல் (பி.பாா்ம்) முதல், மூன்றாம் பருவத் தோ்வுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்தத் தோ்வுகள் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவம் சாா்ந்த துணை பட்டயப் படிப்புகளில் செய்முறை, நடைமுறைத் தோ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும். இதில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த நடைமுறைத் தோ்வுகள் நடைபெறும் கல்வி நிறுவனங்களில், மத்திய, மாநில அரசுகள் வழங்கியிருக்கும் பொதுநல அறிவிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்”என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com