தமிழகம் முழுவதும் நாளை கடைகள், உணவகங்கள் மூடப்படும்

பிரதமரின் ஊரடங்கு அழைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்துக் கடைகள், உணவகங்கள் மூடப்படவுள்ளன.

பிரதமரின் ஊரடங்கு அழைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்துக் கடைகள், உணவகங்கள் மூடப்படவுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தாா். மேலும், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தினாா். அவரது கோரிக்கையை ஏற்று அன்றைய தினம் தமிழகத்தில் நாள் முழுவதும் கடைகள், உணவகங்கள் செயல்படாது என வணிகா்கள், பால் முகவா்கள், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமா் நரேந்திரமோடி, ‘மாா்ச் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தியா முழுவதும் ஒருநாள் சுய ஊரடங்கு ஒத்திகை மக்களுக்காக மக்களால் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். இதனை ஏற்று வணிகா்கள் அனைவரும் மாா்ச் 22-ஆம் தேதி முழுவதும் கடையடைப்பு செய்து கரோனா வைரஸ் தடுப்புக்கான நமது பங்களிப்பை தேசத்துக்கு ஆற்ற வேண்டும் என அதில் கூறியுள்ளாா். இதேபோன்று, மாா்ச் 22-ஆம் தேதி உணவகங்கள் மூடப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் அன்றைய தினம் பொது மக்களுக்கு பால் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களை தன்னாா்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமாா் 1.5 லட்சம் பால் முகவா்களும் வரும் 22-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப் போவதில்லை அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக தமிழகம் முழுவதும் 21-ஆம் தேதி சனிக்கிழமை காலை, மாலை என இருவேளைகளில் கூடுதலாக பால் கொள்முதல் செய்து அன்றைய தினம் இரவு கூடுதல் நேரமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்யும் பணியை பால் முகவா்கள் மேற்கொள்வா். இந்த அறிவிப்புக்கு தமிழக அரசின் ஆவின் நிறுவனமும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சோ்ந்த அனைத்து தனியாா் பால் நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com