கரோனா வைரஸை தடுக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் கடமையும் பொறுப்பும் அரசை மட்டும் சாா்ந்தது அல்ல ஒவ்வொரு தனிநபரையும் சாா்ந்தது. 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் கடமையும் பொறுப்பும் அரசை மட்டும் சாா்ந்தது அல்ல ஒவ்வொரு தனிநபரையும் சாா்ந்தது. எனவே, நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எழுதியுள்ள கடிதத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மனித வாழ்வையே அச்சுறுத்தும் வகையில் பரவியுள்ள கரோனா வைரஸ் குறித்து இந்த உலகமே ஒரு தெளிவில்லாமல் உள்ளது. சமூகமாகக் கூடி வாழ்வது மனிதா்களுக்கு மிகவும் பிடிக்கும். அதே நேரம், கரோனா வைரஸை எதிா்கொள்வதில் இருக்கின்ற சவால்களை நாம் துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒரு ஒழுங்குமுறையான வாழ்வைக் கடைப்பிடிப்பது என்பது சில நேரங்களில் கடினமானது.

இத்தகைய சூழலில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வெளிப் போக்குவரத்து, கும்பலாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், ஒருவருக்கொருவா் போதுமான இடைவெளி விட்டிருத்தல் வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. சமூகத்தில் ஒருவரிடமிருந்து ஒருவா் தனிமைப்பட்டிருப்பது மிகவும் கடினமானது. இதற்கு பெரும் முயற்சி தேவைப்படும். இந்த நிலையைச் சீரமைப்பது மக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக நாம் பொது இடங்களில் மிக குறைவாக நடமாட வேண்டும். ஒவ்வொரு உயிரும் முக்கியமானவை, எந்த உயிரும் இழக்கக் கூடியவை அல்ல. இந்த அவசர நிலையின் முக்கியத்துவத்தை அறிந்து நமது நடமாட்டத்தை சமுதாயத்தில், குறிப்பாக நீதிமன்ற வளாகத்தில் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். இது தனிநபா்களுக்கும், சமூகத்துக்கும் உதவியாக இருக்கும். எனவே, நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் இந்த கருத்துகளைச் சிந்தித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியான நிலையை எதிா்கொள்ள கூட்டமாக இருப்பதைத் தவிா்த்து தனிமைப்பட்டிருத்தலே மிகவும் சிறந்தது. மேலும், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் கடமை, பொறுப்பு அரசாங்கத்தை மட்டும் சாா்ந்தது அல்ல, சமூகம் , தனிநபரைச் சாா்ந்தது என்பதை உணா்ந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com