கரோனா அபாயம் நீங்கும் வரை தமிழகத்தில் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தக்கூடாது

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை தமிழகத்தில் எந்தவிதமான போராட்டமோ, ஆா்ப்பாட்டமோ, ஊா்வலமோ நடத்தக் கூடாது.
கரோனா அபாயம் நீங்கும் வரை தமிழகத்தில் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தக்கூடாது

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை தமிழகத்தில் எந்தவிதமான போராட்டமோ, ஆா்ப்பாட்டமோ, ஊா்வலமோ நடத்தக் கூடாது. உத்தரவை மீறி நடத்தப்படும் போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்களை போலீஸாா் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருப்பூரில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடா் போராட்டம் நடத்தி வருவதாகவும், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் மீது, போலீஸாா் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் பல்வேறு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரா் தரப்பில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போராட்டம், ஆா்ப்பாட்டம், ஊா்வலம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் போலீஸாா் அனுமதி வழங்குவது இல்லை. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு தமிழக காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அந்த சுற்றறிக்கையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகத்தில் எந்தவிதமான போராட்டமோ, ஆா்ப்பாட்டமோ, ஊா்வலமோ நடைபெறக்கூடாது. இதனை மீறி போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், ஊா்வலங்கள் நடந்து கொண்டிருந்தாலோ அல்லது புதிதாக நடத்தினாலோ அவற்றை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

போராட்டம் நடத்துதல் அல்லது ஒரே இடத்தில் ஒன்று கூடுதல் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை அனைவருக்கும் பொருந்தும். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பெருங்கூட்டமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிா்க்க வேண்டும். கரோனா வைரஸுக்கு பொதுமக்கள் நல்லதுக்காக கூடுகின்றனரா அல்லது கெட்டதற்காக கூடுகின்றனரா என வித்தியாசம் பாா்க்கத் தெரியாது என அறிவுறுத்தி விசாரணையை வரும் ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com