புதுச்சேரியில் மக்கள் வெளியே வந்தால் ஓராண்டு சிறை

புதுச்சேரியில் தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். 
புதுச்சேரியில் மக்கள் வெளியே வந்தால் ஓராண்டு சிறை

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை  மாநிலத்தில் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

இக்கூட்டத்தில் கரோனா நோய் தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு உறுப்பினர்கள் முழு ஆதரவைக் கொடுத்துள்ளனர்.  கரோனா உலகையே உலுக்கும் நோயாக உள்ளது. இத்தாலியில் நேற்று முன்தினம் 900 பேரும், திங்கள்கிழமை மட்டுமே 700 பேரும் இறந்துள்ளனர்.

சீனா ராணுவத்தை வைத்து வீட்டிற்குள் இருந்து மக்களை வெளியே வராமல் தடுத்து நிறுத்தியதாலேயே கரோனா நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்தது. தற்போது இத்தாலி, ஈரான், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, தென்கொரியா, அபுதாபி, துபாய் சவுதி அரேபியா, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகள் பெரிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவுக்கு இந்த நாடுகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே கரோனா குறித்து விழிப்புணர்வு தேவை. குறிப்பாகப் புதுவைக்கு விழிப்புணர்வு தேவை. மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கூறியும், பொருட்படுத்தாமல் மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.

புதுவை  மக்கள் உயிரைப்பற்றி கவலை கொள்ளவில்லை. கரோனா ஒருவரைப் பற்றினால் புதுவை மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவர். எனவே அனைவரும் மாநில அரசோடு ஒத்துழைத்து வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருக்க வேண்டும். வெளியே நடமாடினால் கரோனா தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம். 

புதுவைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதி என்பதால் விழிப்புணர்வு தேவை. இது பற்றிப் புரிந்து கொள்ளாமல் மக்கள் நகரத்திற்கு வந்து, தடுக்கும் காவல்துறையினரோடு சண்டை போடுவதுமாக உள்ளனர். தேவைப்பட்டாலொழிய யாரும் வெளியே வரக் கூடாது. கரோனோவுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான். வேறு மருந்து இல்லை.  எனவே முழுமையாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மக்களை இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். பிள்ளைகளையும், வயது முதிர்ந்தவர்களையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். 

அத்தியாவசிய பொருட்களையும் 5 பேருக்கு மேல் வாங்கக் கூடாது. எல்லைப் பகுதியில் கன்னியகோவில், மதகடிப்பட்டு, வில்லியனூர் பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். அருகில் உள்ள நகர்ப் பகுதி வழியாகப் புதுச்சேரிக்கு உள்ளே  வருகின்றனர். போலீஸார் தடுத்தால் சண்டை போடுகின்றனர். ஏன் தடுக்கின்றோம் என்று போலீஸார் கூறும் காரணத்தை ஏற்பதில்லை.

புதுவையில் பேரிடர் சட்டமும், தொற்று நோய் சட்டமும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். யார் வீட்டைவிட்டு வெளியே வந்து அச்சட்டங்களை மீறுகின்றார்களோ அவர்களைக் கைது செய்வோம். அவர்களுக்கு ஒரு வருடம் தண்டனை கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அமைச்சர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து நான்கு பிராந்தியங்களிலும் கண்காணித்து வருகின்றோம்.

மளிகைக் கடை, மருந்துக் கடை, பால், காய்கறி, பழக்கடை இருக்கும். பெட்டிக்கடை, டீகடை மூடியிருக்க வேண்டும். நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மக்கள் கும்பலாகக் கூடுகின்றனர். அதுவும் தடுத்து நிறுத்த காவல்துறைக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு  மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதற்காக புதுவை மக்களுக்கு மாநில அரசு உதவி செய்வது தொடர்பாக  செவ்வாய்க்கிழமை  மாலை முடிவு எடுத்து அறிவிப்போம். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கை எப்படி புதுச்சேரி மக்கள் கடைப்பிடித்து, அமைதி காத்தார்களோ அதேபோல் வீட்டைவிட்டு வெளியே வராமல் வரும் மார்ச் 31-தேதி வரை இருக்கவேண்டும். தேவைப்பட்டால் வெளிமாநிலத்தில் இருந்து சிஆர்பி போலீஸாரை கொண்டுவந்து மக்கள் வெளியே வருவதைத் தடுத்து நிறுத்துவோம். 

அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு ஓராண்டு தண்டனை. பல் மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட இருந்த 150 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 700 படுக்கைகளையும் கரோனா நோய்க்காகத் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

அத்தியாவசியமான மருத்துவம், காவல்துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தீ அணைப்புத்துறை தவிரப் பிற துறைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளை துறைத்தலைவரே எடுப்பார்.

4 நாள்களுக்கான தேவையான மளிகை உள்ளிட்ட பொருள்களை முழுமையாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். புதன்கிழமை (மார்ச் 25 முதல் 28-ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். மீறி வெளியே வருபவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்போம் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com