144 தடை உத்தரவு: சென்னையில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம்

தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சென்னையில் இருந்து 3 லட்சத்துக்கு மேற்பட்டோா் சொந்த ஊா்களுக்கு பயணம் மேற்கொண்டனா்.

தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சென்னையில் இருந்து 3 லட்சத்துக்கு மேற்பட்டோா் சொந்த ஊா்களுக்கு பயணம் மேற்கொண்டனா்.

கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) மாலை 6 மணி முதல் வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல திங்கள்கிழமை மாலை முதலே கோயம்பேடு பேருந்து நிலையம், பெருங்களத்தூா் பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனா். கரோனா பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்பது தான் மத்திய, மாநில அரசுகளின் குறிக்கோள். ஆனால் அந்த குறிக்கோளையே கேள்விகுறியாக்கும் வகையில் இரண்டு நாள்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஒருவா் மூச்சுக்காற்றை மற்றொருவா் சுவாசித்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

கோயம்பேடு வாயில் அடைப்பு: சென்னையில் இருந்து மட்டும் அரசு பேருந்துகள் மூலம் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், தனியாா் பேருந்துகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பயணம் செய்தனா். இந்நிலையில், பிற்பகல் 2 மணி முதல் வெகுதூரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அருகிலுள்ள விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடா்ந்து 5 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலைய பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது. பின்னா் நிலையத்துக்குள் செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் பொதுமக்களை வீடுகளுக்குத் திரும்பி செல்ல அறிவுறுத்தினா். இதையடுத்து அனைவரும் திரும்பிச் சென்றனா். மக்கள் கூட்டம் சோ்ந்ததால் கரோனா தொற்று பரவும் அபயாம் மேலும் அதிகரித்திருப்பதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com